அமெரிக்க நூலக சங்கத்தினால் வெளியிடப்பட்ட பட்டியல் விதிகளின் இரண்டாம் பகுதியின் பதிலீடாக காங்கிரஸ் நூலகத்தினால் வடிவமைக்கப்பட்ட விதிக்கோப்பு. « பட்டியலாக்க விதிகள்
காங்கிரஸ் நூலகப் பொருட்தலைப்புப் பட்டி ((Library of Congress Subject Heading List)
உலகளாவிய ரீதியில் தரம் வாய்ந்ததாகக் கருதப்படும் ஒரேயொரு பொருட்தலைப்புப் பட்டியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இப்பொருட்தலைப்புப் பட்டியானது சரியான பட்டியலாக்கத்துக்கும், பொருள் சார்ந்த தேடுகைக்கும், நூலகர்களின் அருகில் எப்போதும் இருக்கவேண்டிய ஒரு கருவியாகக் கொள்ளப்படுகின்றது. இதன் முதலாவது பதிப்பானது Subject Headings used in the Dictionary Catalogues of the Library of Congress என்ற பெயரில் 190-1914 இடையில் பல பகுதிகளாக வெளியிடப்பட்டது. இதன் பின்னர் ஒழுங்கற்ற கால இடைவெளியில் வெளிவந்த இந்த வெளியீடு இதனது 8வது பதிப்பில் காங்கிரஸ் நூலகப் பொருட்தலைப்புப் பட்டி என்ற தற்போதைய பெயரில் 1975இல் முதன்முதல் வெளியிடப்பட்டது. காங்கிரஸ் நூலகத்தின் பொருள் அதிகாரக் கோப்பிலுள்ள பொருட்தலைப்புகள், வழிகாட்டிக் குறிப்புகள், உப தலைப்புகள் அனைத்தும் அகர ஒழுங்கில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பட்டியாகும். 29வது பதிப்பு 2006ல் வெளியிடப்பட்டுள்ளது. 28ம் பதிப்பானது தற்போது அச்சுருவில் இல்லை. 2,80,000இற்கும் மேற்பட்ட பொருட்தலைப்புகளையும் வழிகாட்டிக் குறிப்புகளையும் உள்ளடக்கி 5 தொகுதிகளாக இது வெளியிடப் பட்டிருக்கிறது. இது அகர வரிசையில் அமைந்த ஒரு பட்டியலாகும். முதலாவது தொகுதியின் ஆரம்பத்தில் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட பொருட்தலைப்புகளின் பட்டியல் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. தலைப்புகள் தடித்த எழுத்துகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இடரீதியாகவோ வகுப்பெண் ரீதியாகவோ தலைப்புகள் மேலும் உப பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம் எனக் கருதப்படும் இடங்களில் தலைப்புக்கருகே வளையடைப்புக்குறிக்குள் அதற்கான விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதிவும் தலைப்பு, வகுப்பெண்கள், வியாபகக் குறிப்பு, சமநிலைத் தொடர்புகள், பரந்த சுருங்கிய சொற்கள், சார்புச் சொற்கள் பொதுவான குறிப்புகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. பொருட்தலைப்புகளில் உப பிரிவுகள் காட்டப்பட வேண்டின் அது – என்ற குறியீட்டினால் காட்டப்படுகின்றது. எ-டு கல்வி - பாடத்திட்டம். இரண்டு உப பிரிவுகள் காட்டப்பட வேண்டிய இடங்களில் அது - - இரண்டு குறியீடுகளினால் காட்டப்படுகின்றது. கல்வி – பாடத்திட்டம் - சட்டமும் சட்டவாக்கமும். பொருள், உருவம், காலம், புவியியல் பிரதேசம் ஆகிய நான்கு வகையான உப பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. « பொருட்தலைப்புச் சொல்லாக்கம்
கூட்டிணைப்புப் பட்டியல் (Union Catalogue)
பல நூலகங்களுக்கு பொதுவானதாகவும், அந்த நூலகங்களிலுள்ள எல்லா ஆவணங்களுக்கும் அல்லது ஒரு பகுதிக்குரிய பட்டியல் பதிவுகளை உள்ளடக்கிய முறையிலும், பட்டியற் பதிவுகளில் அந்தந்த ஆவணம் கிடைக்கக்கூடிய நூலகத்தின் விவரங்களையும் உள்ளடக்கிய வகையில் தயாரிக்கப்படும் முறைப்படுத்தப்பட்ட அல்லது சீரான ஒழுங்கு முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் பட்டியல். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நூலகங்களின் தகவல்வளத் தொகுதிகளை முழுமையாகவோ அல்லது அதன் ஒரு பகுதியையோ தொகுத்து வெளியிடப்படும் வெளியீடு இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. தொகுப்பில் உள்ளடக்கும் பிரதேசங்களின் அடிப்படையில் இவை உள்ளுர் சார்ந்தவை, பிரதேச ரீதியானவை, தேசிய ரீதியிலானவை என வகைப்படுத்தப்படுகின்றன. பட்டியல் தொகுப்பில் இவை உள்ளடக்கும் தகவல் வளங்களின் தன்மையின் அடிப்படையில் பருவஇதழ்களுக்கான கூட்டிணைப்புப் பட்டியல், நூலுருவற்ற சாதனங்களுக்கான கூட்டிணைப்புப்பட்டியல் என இவை வகைப்படுத்தப்படுகின்றன. ஆவணத்தின் அமைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்கான கருவியாகத் தொழிற்படல், ஓரு ஆவணத்தின் நூல்விவரத் தரவுகளை அறிந்து கொள்ள உதவுதல், தகவல் முறைமைகளுக்கிடையிலான தகவல் வள இரவல் வழங்கும் திட்டத்துக்கு உதவுதல், தகவல் வளங்களைத் தெரிவு செய்வதற்கான கருவியாகத் தொழிற்படல், நூலகங்களுக்கிடையில் கூட்டுறவு முறையிலான தகவல்வள ஈட்டல் தெரிவு செயற்திட்டங்களை அடைவதற்கு உதவுதல், ஒரு குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தில் உள்ள தகவல் அமைப்புகளின் மொத்த தகவல்வளத் தொகுதியை இனங்கண்டு அவற்றின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ள உதவுதல் போன்றவற்றை இவற்றின் தொழிற்பாடுகளாகக்; கருத முடியும்.
கூட்டு நிறுவனப் பதிவு (Corporate Entry)
அரசாங்கங்கள், அரச திணைக்களங்கள், நிறுவனங்கள், ஏனைய அமைப்புகள் போன்றவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் பட்டியற் பதிவு. « முதன்மைத் தலைப்பு
கூட்டு நிறுவனம் (Corporate Body)
குறிப்பிட்ட பெயரில் இனங்காணப்படுவதும், முழுமையாகச் செயற்படுவதுமான ஒரு நிறுவனம் அல்லது குழு கூட்டு நிறுவனம் எனப்படுகிறது. குறித்த வெளியீடு ஒன்றுக்கு அதிகாரம் பெற்ற அரசாங்கம், அரச திணைக்களங்கள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அந்த நிறுவனங்களே பொறுப்பு என்ற வகையில் அவை படைப்பாளராகக் கருதப்பட்டு அவற்றின் கீழ் பதிவு மேற்கொள்ளப்படும். கூட்டுநிறுவனமானது அரசாங்கங்கள், நிறுவனங்கள், மாநாடுகள் என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றது. அரசாங்கத்தின் கீழ் திணைக்களங்கள், பிரிவுகள், பகுதிகள், கிளைகள் போன்ற ஒர் அமைப்பின் பிரதான பகுதியாக இனங்காணப்படும் அமைப்புகளும், குழுக்கள், ஆணைக்குழுக்கள், சபைகள் போன்ற ஒர் அமைப்பின் கீழ் இயங்கும் ஸ்தாபனங்களும், யுபநnஉல என்ற பெயரால் இனங்காணப்படும் முகவர் அமைப்புகள், அரசாங்கத்தின் கீழ் இயங்கும் அமைச்சுகள், சட்டவாக்க அமைப்புகள், நீதிமன்றுகள், இராணுவ சேவைகள், அரசாங்கத் தலைவர்களின் உத்தியோகபூர்வ அறிக்கைகள், தூதரகங்கள் போன்றவையும் உள்ளடக்கப்படுகின்றன. நிறுவனங்கள் என்பதன்கீழ் சமூக, பொருளாதார, அரசியல், கலாசார, மத நிறுவனங்கள் அனைத்தும் உள்ளடங்கும். குழு, ஆணைக்குழு என்ற பெயரால் இனங்காணப்படும் அமைப்புகள், பல்கலைக்கழக பீடங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், நிறுவனங்கள், ஆய்வு கூடங்கள் போன்றவை இவற்றுள் முக்கியமானவை. மாநாட்டின் கூட்டு நடவடிக்கைகள் சம்பந்தமான அறிக்கைகள் (மாநாட்டுக் குறிப்பேடு, கட்டுரைகள் போன்றவை), ஆய்வு நடவடிக்கைகள் (பரிசோதனைகள், கண்டுபிடிப்புகள் போன்றவை), நிகழ்வுகள் (விழாக்கள், கண்காட்சிகள் போன்றவை) மாநாடுகள் என்ற பிரிவுக்குள் முக்கியமானவையாகும்.
அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ வெளியீடுகள், சட்டங்கள் என்பவற்றுக்கு சீரமைவுத் தலைப்பு பயன்படுத்தப்பட்டு அரச திணைக்களங்கள், பிரிவுகள், பகுதிகள், கிளைகள் போன்றவை நாட்டின் பெயருக்கு அடுத்ததாகப் பதியப்படுகிறது. எ-டு இலங்கை. கல்வி வெளியீட்டுத் திணைக்களம். அரச அமைப்பின் கீழ் இயங்கும் அமைச்சுகள், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வெளியீடுகளுக்குப் பொறுப்பாக இருக்கும் தாபனங்கள், குழுக்கள், சபைகள், சட்டவாக்க அமைப்புகள், நீதிமன்றுகள், இராணுவ சேவைகள், ஜனாதிபதி அறிக்கைகள், தூதரங்கள் போன்றவையும் இதே வகையில் பதியப்படும். எ-டு இலங்கை. ஜனாதிபதி ஆணைக்குழு. நிறுவனத்தின் கூட்டான கருத்தைக் கொண்ட ஆக்கங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே பதியப்படும். நிறுவனம் ஒன்றின் நிர்வாகம் சம்பந்தமான ஆக்கங்கள், உத்தியோகபூர்வ அறிக்கைகள், ஒழுங்கு விதிகள், நிறுவனத்தின் மூலவளங்கள் பற்றிய பட்டியல்கள் நிறுவனத்தின் பெயரின் கீழேயே பதியப்படல் வேண்டும். அது மட்டுமன்றி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு சம்பந்தப்பட்ட நூல்கள் படைப்பாளர் பெயர் இல்லாதவிடத்து நிறுவனத்தின் பெயரின் கீழேயே பதியப்பட வேண்டும். பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், நிறுவனங்கள், ஆய்வுகூடங்கள் போன்ற கல்வியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் நிறுவனப் பதிவே வழங்கப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் கீழ் இயங்கும் பகுதிகள், பிரிவுகளை நிறுவனத்தின் பெயருக்கு அடுத்ததாகப் பதியப்படுகிறது. எ-டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். கலைப்பிரிவு. குழு, ஆணைக்குழு, சங்கம் போன்ற பெயர்களால்; இனங்காணப்படும் நிறுவனங்கள். எ-டு நூலகச் சங்கங்களின் சர்வதேசச் சம்மேளனம். மாநாட்டின் பெயரில் காணப்படும் எண்கள், காலம், வருடம் போன்றவை முதன்மைப் பதிவில் தவிர்க்கப்பட்டு அவை உப தலைப்பாக வளை அடைப்புக்குறிக்குள் பதியப்படும். எ-டு உலக இந்து மாநாடு (2வது: 2003: மன்னார்). « முதன்மைத் தலைப்பு
கூட்டுப் படைப்பாளர் (Joint Author)
Ú இணைப் படைப்பாளர்
கூட்டுறவுமுறைப் பட்டியலாக்கம்(Co-operative Cataloguing)
தனிப்பட்ட சில நூலகங்கள் ஒன்று சேர்ந்து தம்மிடையே பரஸ்பர நன்மையை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் பட்டியல் தயாரிப்பதற்கான வேலைகளைப் பகிர்ந்துகொள்வதனூடாக மேற்கொள்ளப்படுகின்ற பட்டியலாக்கமுறை. இந்த முறையில் பிரதேச சபை நூலகங்களோ மாநகரசபை நூலகங்களோ தமக்குள்ளே கூட்டுறவு முறையிலான பகுப்பாக்கம் பட்டியலாக்கத்துக்கென ஒரு துறையை ஏற்படுத்தி அதனடிப்படையில் நூல்களைப் பகுப்பாக்கம் செய்து தாம் ஒரு பிரதியைப் பேணிக்கொண்டு அந்தந்த நூலகங்களுக்கு பட்டியல் அட்டைகளை அனுப்பலாம். இது மனித வளத்தையும் மேலதிக செலவையும் குறைக்கக் கூடியது. ஆரம்ப காலத்தில் அமெரிக்க ஆய்வு நூலகங்கள் கூட்டுறவு முறையிலான பட்டியலாக்கத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காங்கிரஸ் நூலகம் பட்டியல் அட்டைகளை அச்சிட்டு அவற்றின் பிரதிகளை நியாய விலையில் ஏனைய நூலகங்களுக்கு விநியோகித்தது.
தனிப்பட்ட சில நூலகங்கள் ஒன்று சேர்ந்து தம்மிடையே பரஸ்பர நன்மையை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் பட்டியல் தயாரிப்பதற்கான வேலைகளைப் பகிர்ந்துகொள்வதனூடாக மேற்கொள்ளப்படுகின்ற பட்டியலாக்கமுறை. இந்த முறையில் பிரதேச சபை நூலகங்களோ மாநகரசபை நூலகங்களோ தமக்குள்ளே கூட்டுறவு முறையிலான பகுப்பாக்கம் பட்டியலாக்கத்துக்கென ஒரு துறையை ஏற்படுத்தி அதனடிப்படையில் நூல்களைப் பகுப்பாக்கம் செய்து தாம் ஒரு பிரதியைப் பேணிக்கொண்டு அந்தந்த நூலகங்களுக்கு பட்டியல் அட்டைகளை அனுப்பலாம். இது மனித வளத்தையும் மேலதிக செலவையும் குறைக்கக் கூடியது. ஆரம்ப காலத்தில் அமெரிக்க ஆய்வு நூலகங்கள் கூட்டுறவு முறையிலான பட்டியலாக்கத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காங்கிரஸ் நூலகம் பட்டியல் அட்டைகளை அச்சிட்டு அவற்றின் பிரதிகளை நியாய விலையில் ஏனைய நூலகங்களுக்கு விநியோகித்தது.
No comments:
Post a Comment